
சினிமாவில் டப்பிங் கலைஞராக இருக்கும் சிவாவுக்கும், சேனல் தொகுப்பாளினி வசுந்தராவுக்கும் திருமணத்தின் மீது வெறுப்பு. சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, குடும்பம் ஏற்பாடு செய்கிறது. இருவருமே ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் திருமணத்தை நிறுத்த திட்டம் போடுகிறார்கள். இறுதியில் இருவருக்குமே அது தெரியவர, நண்பர்களாக பிரிகிறார்கள். பிறகு அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அது எப்படி என்பதை சொன்னால் புரியாது.
சிவா, டைமிங் காமெடியிலேயே ஸ்கோர் பண்ணிப்போகிறார். ஒரு

கட்டத்துக்குப் பிறகு அது போரடிக்க ஆரம்பிக்கும்போது, படம் தள்ளாட ஆரம்பிக்கிறது. ஆனாலும் நோகாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாகச் செய்கிறார். தன் மனக் குமுறல்களை ஆங்கில பட டப்பிங்கில் காட்டுவது, தண்ணியடித்துவிட்டு வீட்டுக்குத் தெரியாமல் இருக்க, கொய்யா இல்லையை தின்று தீர்ப்பது, தன் கார் கனவை குறித்து வைக்க செக்யூரிட்டிக்கு டைரி கொடுப்பது என்று காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்தே படத்தின் குறைகளை மறக்க வைக்கிறார். திருமணத்தை நிறுத்த வசுந்தராவின் அப்பாவிடம் இவர் சொல்லும் ‘மேட்டர் இல்லாத’ பொய்யும், அதை சீரியசாக எடுத்துக் கொண்டு சிவாஜி அடிக்கும் வசனமும் அதிர வைக்கிறது.

‘வர்ற பிகரையெல்லாம் இவனே பிக்கப் பண்ணிக்கிறானே’ என்று அலுத்துக்கொள்ளும் பிளேடு சங்கரும், எப்ப பார்த்தாலும் தீனியிலேயே கவனமாக இருக்கும் குண்டு பையனும், சிவாவின் காமெடி கச்சேரிக்கு பக்க வாத்தியங்கள். ஆன்மீக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, குடும்ப குத்துவிளக்காக அறிமுகமாகி, பிறகு அதிரடி திருப்பத்தில் அதிர வைக்கிறார் வசுந்தரா. சில கோணங்களில் அழகாகத் தெரிகிறார். காதல் பூக்கும் தருணங்களில் அட சொல்ல வைக்கிறார்.
இசையும், ஒளிப்பதிவும், உள்ளேன் அய்யா வகையறா. சரவணன் சந்துருவின் வசனங்கள் பலம். டப்பிங் ஸ்டூடியோ, கட்டுப்பாடான கிராமத்தில் கல்யாணம், கால்கட்டு டாட் காம் என்ற நிறுவனம் ஆகிய ஏரியாவில் வெடிக்கும் சிரிப்பு வெடிகள், படத்துக்கு பிளஸ். அதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது மைனஸ்.

‘இலையில ஜாங்கிரி வச்சதுக்காக காதல் வருமா’ என்று கிண்டல் செய்தவர்கள், ‘கேம் ஷோ’வில், ‘என்ன திட்டினாலும் சிரிக்கிறானே’ என வசுந்தரா காதல் கொள்வதை சீரியசாகக் காட்டியிருக்கிறார்கள். அந்த கேம் ஷோ அப்படியொரு சொதப்பல். காமெடியும், காமெடிக்கான ஸ்கோப்பும் நிறைய இருக்கிறது. ஒரு சினிமாவுக்கு அதுமட்டும் போதுமா என்ன?
, தினகரன் விமர்சனக்குழு.
No comments:
Post a Comment